புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஜூன் 2020 (11:49 IST)

ஆபத்தை உணராமல் நடத்தப்பட்ட பொதுத்தேர்வு! மாணவர்களுக்கு கொரோனா!

கர்நாடகாவில் கொரோனா ஊரடங்கிலும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு வீரியமடைய தொடங்கியதால் பல மாநிலங்களில் பள்ளி பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழகம், தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் தேர்வை ரத்து செய்து முழு தேர்ச்சி வழங்குவதாக அறிவித்தன. மத்திய அரசும் சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்து மாணவர்களுக்கு முந்தைய தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த 25ம் தேதி முதல் பல்வேறு பாதுகாப்புகளுடன் 10ம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு மாஸ்க் அளித்தல், சானிட்டைசர் வழங்குதல் மற்றும் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளையும் செய்துள்ளனர். இந்நிலையில் ஹாசன் மாவட்டம் அரகால்குட் பகுதியில் பள்ளி ஒன்றில் பொதுத்தேர்வு எழுதிய மாணவனுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சக மாணவர்கள், பணியிலிருக்கும் ஆசிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் கிருமி நாசினிகள் தெளித்திருப்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறியிருப்பதாக கூறப்படுகிறது. மாணவருக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் அவரை தேர்வு எழுத அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.