அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் பத்திரம் வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டி ரூ.8000 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் பெங்களூரு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதில், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்பட நிர்வாகிகளை மிரட்டி, பாஜகவுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் பத்திரம் வாங்க வைத்ததாகவும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மேலும், "பணம் தராவிட்டால் ரெய்டு நடத்துவோம்" என்று மிரட்டியதாகவும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், தேர்தல் பத்திரம் வாங்கியதால் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்திருந்தால், அது முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையாக இருந்திருக்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
மனுதாரர் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதால் இந்த வழக்கை தொடர அனுமதிக்க முடியாது என்று நீதிபதி தீர்மானித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
Edited by Siva