ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (09:14 IST)

அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை!

கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோவை இணையத்தில் பாஜகவினர்  வெளியிட்டனர்.  இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு,  அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜகவினரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கோவை காந்திபார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  
 
மேலும் "பன் மாலை" அணிந்தும்,  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு "க்ரீம் பன்" னையும் வழங்கினர். அப்போது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜகவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
 
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை கூறும் போது: 
 
இதுவரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு சிங்கிள் பைசா தமிழ் நாட்டுக்கு கொடுத்து இருப்பாரா?  தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் எண்ணத்துடன் ஒன்றிய பாஜக இருக்கிறது.  தமிழகம் வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிலுக்கு சென்று அங்கு உண்டியலில் பணம் போட வேண்டாம்,  அது அரசுக்கு செல்லும் என கூறியுள்ளார்.  அதேபோல் நாங்கள் சொல்கிறோம்.  அரசுக்கு மக்கள் வரி செலுத்த வேண்டாம் ஏழை எளிய மக்களுக்கு தாங்களே கொடுத்து விடுங்கள் என கூறலாமா?  என நாங்கள் கேட்கிறோம். சென்னை மெட்ரோ 2 ஆவது திட்டத்திற்கு பணம் தருகிறோம் என கூறிவிட்டு,  இதுவரை தரவில்லை.  வருடத்திற்கு 20 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி கட்டும் தமிழகத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும். அரசை காப்பாற்றிக் கொள்ள,  ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக சந்திரபாபு நாயுடுக்கும்,  நிதீஷ் குமாருக்கு இலட்சக்கணக்கான கோடிகளை சிறப்பு திட்டம் என அழைத்து கொடுக்கிறீர்கள்.  இதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழக மக்களின் வரிப்பணத்தை மற்றொரு மாநிலத்திற்கு வாங்கிக் கொடுப்பது என்ன நியாயம்.  இதனை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,  வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். நீங்கள் எதை வைத்து அரசியல் செய்கிறீர்களோ அது உங்களுக்கு எதிராக திரும்பிக் கொண்டிருக்கிறது.  அயோத்தியில் ராமர் கோயில் என கூறி இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிரித்து பார்த்தீர்கள்.  ஆனால் அதே அயோத்தியில் இந்துக்களும்,  இஸ்லாமியர்களும் இணைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைத்தார்கள்.  ஹிமாச்சல் பிரதேசத்திலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வைத்தார்கள்.  கோவை மாவட்டத்தில் இப்படிப்பட்ட அவமானம்படுத்தும் செயலை செய்துள்ளனர்.  இதனை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.  அமெரிக்காவில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டிக்கிறார். ஆனால் இங்கு இருக்கும் பிரதமர் மோடி ஏன் கண்டிக்கவில்லை? சக அமைச்சர்கள் ஏன் இது குறித்து பேசவில்லை?  வானதி சீனிவாசன் இந்த தொகுதியில் உள்ள அன்னபூர்ணா தொழிலாளர்களிடமும் வாக்கு கேட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகி  இருக்கிறார். இதெல்லாம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெரியாது.  காரணம் அவர் தேர்தலில் மக்களை சந்திப்பதில்லை. எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடமாட்டார்.  கொள்ளை புறம் வழியாக மாநிலங்களவை உறுப்பினராகி அமைச்சராகி இருக்கிறார். ஆனால் மக்களை தினம், தினம் சந்திக்கிறேன் எனக் கூறும் வானதி சீனிவாசனுக்கு இது தெரியாமல் எப்படி போனது?  நீங்களே அழைத்து அதுவும்,  தனிநபராக இல்லாமல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதியாக சென்றவர் அன்னபூர்ணா  சீனிவாசன், தனது துறை சார்ந்த பிரச்சனைக்கு நியாயம் கேட்டுள்ளார். தவறாக அவர் ஏதும் பேசவில்லை கோவை தமிழில் மரியாதையாக நிதியமைச்சரிடம் எங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது என கூறினார்.  
 
பின்னர் அவரை மிரட்டி விடுதிக்கு வர வைத்து மன்னிப்பு கேட்க வைத்ததோடு,  அதனை வீடியோவாக வெளியிட்டு தங்களது ஆணவத்தின் உச்சத்தை காட்டியுள்ளனர்.  சர்வாதிகாரத்தின் எல்லை கடந்து போவது தான் இது என கூறினார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை கூறும் போது: 
 
அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலையிட்டு தனது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும்.  முதலில் அன்னபூர்ணா  சீனிவாசனை   மன்னிப்பு கேட்க சொன்னது தவறு. அவரே பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டு இருந்தாலும் அதனை வீடியோவாக வெளியிட்டது மிகப்பெரிய தவறு.  அவர் பெரிய தவறு ஒன்றும் செய்யவில்லை தொழிலாளர்கள்,  ஹோட்டல் உரிமையாளர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.  இதனை பாசிசத்தின் உச்சம் என நாங்கள் கண்டிக்கிறோம்.  உடனடியாக நிபந்தனையட்ட மன்னிப்பு கேட்க வேண்டும்.  இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டமாக இது முடியும். மேலும் அந்த வீடியோவில் பார்க்கும் போது அவரால் இருக்கையில் நன்றாக கூட அமர முடியவில்லை. அவர் அடிமையா? இந்த தேசத்திற்கு வரி கட்ட கூடியவர். பல்லாயிரம் தொழிலாளிக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருபவர்.  அவர் ஏன் கூனிக்குறுகி  அமர வேண்டும்.  அடிக்கடி எழுந்து நின்றார் அவ்வாறு நடந்திருந்தாலும் கூட அதனை வீடியோவாக எடுத்து பொதுவெளியில் வெளியிட்டது யார்? ஒரு நிதி அமைச்சரை சந்திக்க மற்ற கட்சியினர் செல்ல முடியுமா? இதைத் திட்டமிட்டு செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என கூறினார்.