28 வயது மருத்துவர் மீது மர்ம பெண் ஆசிட் வீச்சு: கள்ள காதலியா என சந்தேகம்
காஸியாபாத்தில் உள்ள வைசாலியில் நேற்று கலை 28 வயது கால்நடை மருத்துவர் மீது மர்ம பெண் ஒருவர் 4 லிட்டர் ஆசிட்டை வீசியுள்ளார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் அமித் வெர்மா கால்நடை மருத்துவமனையில் காலை 8 மணிக்கு நாய்கள் பிரிவில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் போது இந்த ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகம், மார்பு, கை போன்றவற்றில் 40 சதவீத காயங்களுடன் மருத்துவர் அமித் வெர்மா தற்போது பேச முடியாத நிலையில் இருப்பதால் அவரிடம் விசாரிக்க முடியாத நிலையில் காவலர்கள் உள்ளனர். இந்நிலையில் அவருடன் ரூமில் வசித்து வரும் தீபக்கிடன் விசாரணை நடத்தினர் காவல் துறையினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அமித் இதற்கு முன்னர் மீரட்டில் கால்நடை மருத்துவராக பணி புரிந்ததாகவும், அங்கு வாடகை வீட்டில் இருந்த போது அந்த வீட்டின் உரிமையாளர் பெண்ணுடன் நெருங்கிய உறவுடன் வாழ்ந்து வந்ததாக கூறினார்.
அமித் அங்கிருந்து இங்கே வந்த பின்னர் அவர்கள் உறவு சுமூகமாக போகவில்லை. இந்நிலையில் கடந்த 18 நாட்களில் அந்த பெண் அமித் வெர்மாவை 3 முறை வந்து சந்தித்ததாக தீபக் கூறினார்.
இந்நிலையில் காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் ஒரு அடையாள அட்டையயும், பர்ஸையும் கைப்பற்றியுள்ளனர். அதில் உள்ள புகைப்படம் சந்தேகப்படும் அந்த பெண்ணுடன் ஒத்துப்போகவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து காவல் துறையை குழப்புவதற்காக வேண்டுமென்றே அந்த தவறான அடையாள அட்டையை அந்த பெண் விட்டு சென்றிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் அமித் வெர்மா ஓரளவு குணமாகி பேசினால் தான் இந்த வழக்கு மேலும் முன்னேறும் என காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.