அம்பானி வீட்டு திருமணம் குறித்து ஜிக்னேஷ் மேவானியின் டுவீட்
இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி நாட்டில் 84 கோடி பேர் வறுமைக்கோட்டில் இருக்கும் நிலையில் ஒரே ஒரு திருமணத்திற்காக ரூ.700 கோடி செலவு செய்தது தேவையா? என்று குஜராத் எம்.எல்.ஏவும், போராளியுமான ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
சமீபத்தில் தொழிலதிபர் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் மிக ஆடம்பரமாக நடந்தது. இந்த திருமணத்தில் ஹிலாரி கிளிண்டன் உள்பட உலக பிரபலங்களும், உள்ளூர் விவிஐபிக்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த ஆடம்பர திருமணம் குறித்து ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: முகேஷ் அம்பானி தனது மகள் இஷா திருமணத்திற்கு 700 கோடி செலவு செய்துள்ளார். அரசின் அறிக்கையின்படி, 84 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கு குறைவாகவே வருவாய் ஈட்டி வரும் நிலையில் இந்த ஒரு திருமணம் அம்பானியும், அவருக்கு நேர் எதிராக வாழும் ஏழை மக்களையும் ஒரு சேர காட்டுகிறது. ஒட்டு மொத்த செல்வமும் ஒருவரிடமே குவிந்துள்ளது. இத்தகைய வெளிப்பாடு என்பது மிகவும் மோசமான நிலை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜிக்னேஷின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அம்பானி தன்னுடைய உழைப்பால் சம்பாதித்த பணத்தை தனது மகளின் திருமணத்திற்கு செலவு செய்வதில் என்ன தவறு? என்றும், 84 கோடி மக்கள் வறுமையில் இருப்பதற்கு அம்பானியா காரணம்? என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். மக்கள் வறுமையில் வாடினால் அதற்கு அரசு தான் காரணமே அன்றி, அம்பானி காரணம் அல்ல என்றும், வறுமை ஏன்? என்று ஜிக்னேஷ் அரசிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்றும் கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது.