சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!
சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர் என்றும், திருப்பதி லட்டுக்கு பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் என்ற வாய்ப்பே இல்லை என முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சந்திரபாபு நாயுடுவின் பொறுப்பில்லாத, அரசியல் உள்நோக்கத்திற்காக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்திற்கே களங்கம் ஏற்படுத்தியுள்ளன. பகவான் வெங்கடேஷ்வரருக்கு இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையை சரியான முறையில் கையாளவில்லை என்றால், இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் பக்தர்களின் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தி, பல்வேறு இடங்களில் பிரச்சனைகளை உருவாக்கும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தினமும் 9 லட்சம் லட்டுகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அது சுயாதீனமான ஒரு வாரியமாக செயல்படுகிறது என்றும், உண்மையான பக்தர்களும், மத்திய அமைச்சர்களும், பிற மாநில முதல்வர்களின் பரிந்துரைகளில் நியமிக்கப்பட்டவர்களும் மட்டுமே நிர்வாகத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், சில நிர்வாக உறுப்பினர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என்றும், திருப்பதி கோயில் நிர்வாகத்தை பூரணமாக அறங்காவலர் குழு மட்டுமே மேற்பார்வை செய்கிறது என்றும், ஆந்திர மாநில அரசின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது.
கோயிலுக்குள் கொண்டு வரப்படும் நெய்யின் தரத்தைப் பற்றி பல சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு டெண்டர் விடுவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நெய்யின் தரம் என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகள் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியிலும் பின்பற்றப்பட்டதாகவும், கலப்பட நெய்யின் பயன்பாட்டிற்கு இடமில்லை.
சந்திரபாபு நாயுடு தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறார். அரசியல் நோக்கங்களுக்காக கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை காயப்படுத்தியுள்ளார். அவரது செயல்கள் முதல்வர் எனும் பதவியின் மரியாதையைக் குறைத்ததோடு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தையும் களங்கப்படுத்தியுள்ளன. இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Edited by Siva