வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (14:24 IST)

ஜெகன் மோகன் மீண்டும் வெற்றி பெறுவார்..! ரூ.30 கோடி பந்தயம் கட்டிய நிர்வாகி மர்மமரணம்..!

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ரெட்டி மீண்டும் வெற்றிபெறுவார் என்று ரூ.30 கோடி பந்தயம் கட்டிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி 175 தொகுதிக்கு 164 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  படுதோல்வியை சந்தித்தது.
 
இந்நிலையில் ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், நூஜிவேடு மண்டலம், தூர்ப்பு திகுபல்லி எனும் கிராமத்தை சேர்ந்த வேணுகோபால் என்பவர்,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார்.   ஜெகன்மோகன் ரெட்டியே மீண்டும் முதல்வர் ஆவார் என்றும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தான் ஆந்திராவில் வெற்றிபெறும் எனவும் வேணுகோபால் ரெட்டி பலரிடம் ரூ. 30 கோடி வரை பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது.
 
தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி தோல்வியடைந்த நிலையில் பந்தயம் கட்டியவர்கள் வேணுகோபாலுக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரது போன் செயலிழந்திருந்ததால், ஆத்திரம் கொண்ட சிலர் வேணுகோபாலின் வீட்டிற்கு சென்று, நடந்த விஷயங்களை அவரது மனைவி விஜயலட்சுமியிடம் கூறி, வீட்டில் இருந்த ஏசி, டிவி, சோஃபா செட், பைக் போன்றவற்றை கொண்டு சென்று விட்டனர்.

 
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய வேணுகோபால் வீட்டின் நிலைமை பார்த்துள்ளார். அப்போதும் பந்தயம் கட்டியவர்கள் பந்தயத்திற்கான பணத்தை தரும்படி கேட்டுள்ளனர். இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளான வேணுகோபால் ரெட்டி, ஊருக்கு ஒதுக்குபுறமாக சென்று, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தற்கொலையா, கொலையா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.