1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (16:23 IST)

பாலியல் வழக்கில் கைதாகிறாரா எடியூரப்பா.? சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை..!!

yediyurappa
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரமாக மேலாக விசாரணை நடைபெற்றது.
 
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வர்  எடியூரப்பா, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது கடந்த மார்ச் 15 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஜூன் 17 ஆம் தேதி சிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராவதாக எடியூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய சிஐடி வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து சிஐடி விசாரிக்கப்பட்டு வரும் புகாரை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  எடியூரப்பா கைதுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரில் உள்ள சிஐடி அதிகாரிகள் முன்பு எடியூரப்பா இன்று  காலை 10:50 மணிக்கு ஆஜரானர். அவரிடம் சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.


அவர் அளித்த வாக்குமூலத்தின் பதிவை நீதிமன்றத்தில் சிஐடி அதிகாரிகள் தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் எடியூரப்பா கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.