செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2024 (17:27 IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை.! எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன்..!!

yediyurappa
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் கர்நாடக முதலமைச்சர்  எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரில் சதாசிவ நகர் போலீசார் எடியூரப்பா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை மாநில அரசு சிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சிஐடி போலீசார், எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் எடியூரப்பா விசாரணைக்கு ஆஜராகவில்லை. தொடர்ந்து இரண்டு முறை சிஐடி போலீசார் சம்மன் அனுப்பியும் எடியூரப்பா விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
 
சிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராக எடியூரப்பா அவகாசம் கோரி இருந்த நிலையில், எடியூரப்பாவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க உத்தரவிடக் கோரி பெங்களூருவில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு உத்தரவு நேற்று பிறப்பித்தது.

 
இந்நிலையில்  சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் முன் ஜாமீன் வழங்கக் கோரி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா ஏற்கனவே மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்திரவிட்டது.