1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (09:21 IST)

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! நீடிக்கப்படுமா ஊரடங்கு? – நிபுணர்கள் சொல்வது என்ன?

நாடு முழுவதும் ஊரடங்கு உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போது ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்புகளால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற அனுமானம் பலரிடையே உள்ளது.

தற்போது ஊரடங்கால் கொரோனா பரவுதல் இரண்டாம் கட்டத்திலிருந்து மூன்றாம் கட்டத்திற்கு செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதார நிலை கடும் பிரச்சினையை சந்தித்து வருகிறது. இந்த நிலை தொடர்வது ஊரடங்கை நீட்டிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைய தொடங்கினால் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்படும் என்பதில் அரசு கவனமாக இருப்பதாக தெரிகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும் கூட மாவட்டரீதியாக பாதிப்பு உள்ள மாவட்டங்கள் முழுவதுமாக தனிமைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. எனவே ஊரடங்கு ஒரேயடியாக தளர்த்தப்பட வாய்ப்பில்லை என்றும் கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு மெல்ல தளர்த்தப்படலாம் எனவும் மருத்துவ மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.