1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By J.Durai
Last Modified: புதன், 19 ஜூன் 2024 (17:35 IST)

இருடியம் வாங்கித் தருவதாக கேரளா தொழில் அதிபரிடம் ரூபாய் 11 கோடி மோசடி வழக்கில் மூன்று பேர் கைது!

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் சிராஜுதீன் தொழிலதிபர். இவரிடம் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கித் தருவதாக கூறி உள்ளார். 
 
இதற்காக அவர் சிராஜுதீனிடம் ரூபாய் 11 கோடி வழங்கினார். அதன் பிறகு அவர் இருடியம் வாங்கி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இது குறித்து சிராஜுதீன் பலமுறை கேட்டும் பெரோஸ்கான் பணத்தை திரும்பிக் கொடுக்காமல், இருடியமும் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி அடைந்த பெரோஸ்கான் தொழிலதிபர் சிராஜுதீனிடம் சமாதானம் பேச சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் முதல் கட்டமாக ரூபாய் 50 லட்சம் தருவதாகவும் மீதித் தொகையை படிப்படியாக திரும்பிக் கொடுப்பதாகவும் கூறி உள்ளார். மேலும் தன் மீது காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. 
 
அதை சிராஜுதீன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து பெரோஸ்கான் நெல்லையைச் சேர்ந்த  ராஜ் நாராயணன், பொன் முருகானந்தம் என்ற பொண்ணு குட்டி ஆகியோரே அணுகி உள்ளார். அவர்களிடம் ரூபாய் 50 லட்சம் தருவதாகவும் தொழிலதிபர் சிராஜுதீனை மிரட்டி காவல் நிலையத்தில் அளித்த புகார் திரும்ப பெற செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து ராஜ் நாராயணன், பொன் முருகானந்தம் காரில் கோவை உள்ள பெரோஸ்கான் வீட்டிற்கு வந்து முதல் கட்டமாக ரூபாய் 20 லட்சம் வாங்கினார். பின்னர் அவர்கள் காரில் சென்னை நோக்கி செல்ல முயன்றனர். 
 
இது குறித்து மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை ஆணையர் தெற்கு சரவணகுமார் மேற்பார்வையில் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் காவல் துறையினர் குனியமுத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பணத்துடன் சென்னைக்கு செல்ல முயன்ற ராஜ் நாராயணன், பொன் முருகானந்தம் மற்றும் கார் டிரைவர் பாலாஜி ஆகியோரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 20 லட்சம் பணம் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெரோஸ்கானை போலீசார் தேடி வருகின்றனர். 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வருமான வரித் துறையினர் வீட்டில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.