தன்னார்வ அமைப்பின் விருதை ஏற்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா
பெங்களூரில் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பார்ப்பன அக்ராஹர சிறையில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து நவீன வசதிகளை பெற்று வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த ஆதாரங்களை திரட்டி வெளியுலகிற்கு தெரிய வைத்தவர் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி ரூபா.
இந்த நிலையில் 'நம்ம சென்னை' என்ற பெங்களூரை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு விருது வழங்கி கெளரவிக்க விரும்பியது. இந்த தொண்டு நிறுவனம் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்படும் அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த அமைப்பின் விருதை ஏற்க மறுத்து ஐஏஎஸ் அதிகாரி ரூபா, அந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், 'இந்த விருதை ஏற்க என் மனசாட்சி இடம் தரவில்லை, ஒவ்வொரு அரசு ஊழியர்களும் நடுநிலையான சமநிலையை மட்டுமே அரசியல் அமைப்புகளிலிருந்தும், அறக்கட்டளை அமைப்புகளிடமிருந்தும் எதிர்பார்க்கின்றனர்' என்று கூறியுள்ளார்.