புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2019 (17:51 IST)

அருண் ஜெட்லி: இந்திய அரசியலின் ஒரு மாபெரும் சகாப்தம்

சற்று முன் மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது அரசியல் பயணத்தில் கடந்து வந்த பாதையை பற்றி பார்க்கலாம்.

அருண் ஜெட்லி 1952 ஆம் ஆண்டு, டிசம்பர் 28 ஆம் தேதி, புது டெல்லியில் மஹாராஜ் கிஷன் ஜெட்லி-ரத்தன் பிரபா ஜெட்லி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது பள்ளி கல்வியை டெல்லியில் உள்ள புனித சவேரியர் பள்ளியில் பயின்றார். பிறகு ஸ்ரீராம் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். பின்பு டெல்லி பல்கலைகழகத்தில் சட்டபடிப்பு பயின்றார்.

1974 ஆம் ஆண்டு, அருண் ஜெட்லி, டெல்லி பல்கலைகழகத்தில் பயிலும்போது அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷாத் என்ற மாணவ அமைப்பில் சேர்ந்தார். பின்பு அந்த அமைப்பின் தலைவராகவும் உயர்ந்தார். 1975-77 ஆகிய இடைப்பட்ட காலங்களில், இந்திரா காந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசர நிலையை எதிர்த்து போராடி சிறை சென்றார். சிறையிலிருந்து வெளிவந்தவுடன் ஜன சங்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

1980 ஆம் ஆண்டு, ஜன சங்கம், பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்த பிறகு அந்த கட்சியின் டெல்லி பகுதியின் இளைஞர் பாசறை தலைவராக உயர்ந்தார். மே 24, 1982 ஆம் ஆண்டு சங்கீதா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும் சோனாலி என்ற மகளும் உள்ளனர்.

1999 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சராக செயல்பட்டார். மேலும் 2000 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2004 ஆம் ஆண்டு வரை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை ராஜ்ய சபாவில் எதிரணி தலைவராக செயல்பட்டார்.

2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, மீண்டும் தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தார். பின்பு பாதுகாப்பு துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அதே சமயம் 2014 ஆம் ஆண்டிலிருந்து மத்திய நிதியமைச்சராகவும் செயல்பட்டார். 2018 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் 2019 ஆம் ஆண்டு மே மாதம் வரை நரேந்திர மோடி அரசின் நிதியமைச்சராக திகழ்ந்தார்.

ராஜ்ய சபாவின் எதிரணி தலைவராக இருந்தபோது, பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த விவாதங்களுக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த இவர், அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தையும் ஆதரித்தார். 2016 ஆம் ஆண்டு இவர் நிதியமைச்சராக இருந்தபோது தான் இந்தியாவையே வியக்கவைத்த, வரி செலுத்தாமல் பதுக்கி வைக்கப்படும் கருப்பு பணங்களை வெளியே கொண்டு வரும் நோக்கில், பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்தியா முழுவதிலும் நேரடி வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் விதமாக GST வரிவிதிப்புமுறையையும் கொண்டு வந்தார். இவர் நிதியமைச்சராக இருந்த போது பொதுத்துறை நிறுவனங்களின் பல குளறுபடிகளையும் சரிசெய்துள்ளார்.

பணவீக்கத்தை 7.2 லிருந்து 2.9 ஆக குறைத்துள்ளார்.  மேலும் தினந்தோறும் பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் நடைமுறையையும் கொண்டுவந்தவர் அருண் ஜெட்லி.

பிஜேபி அரசு மீது வழக்கமாக வைக்கப்படும் மதவாத குற்றசாட்டுகளிலிருந்து எப்போதும் விலகியே இருந்தவர் அருண் ஜெட்லி. உடல் நிலை காரணமாக 2019 ஆம் ஆண்டின் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்ததிலிருந்து அவர் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

இவ்வாறு, இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றிய அருண் ஜெட்லி, உடல்நிலை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவரின் இழப்பு பாஜக கட்சியின் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.