1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (09:33 IST)

உக்ரைன் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காதது ஏன்? – இந்திய தூதர் விளக்கம்!

உக்ரைன் தொடர்பாக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காததன் காரணம் குறித்து இந்திய தூதர் விளக்கமளித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் போர் நிறுத்தம் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் “உக்ரைன் மீதான தாக்குதலின் மனிதாபிமான விளைவுகள்” என்ற தலைப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 140 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதிவாகின. இந்தியா உட்பட 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஐ.நாவின் இந்திய பிரதிநிதி “இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஏனென்றால் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் நாங்கள் கவனம் செலுத்த விரும்புகிறோம். இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் இந்த வரைவு தீர்மானத்தில் சரியாக குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.