1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (09:18 IST)

மாயமான விமானம்: தகவல் தருபவர்களுக்கு ரூ.5 லட்சம் என அறிவிப்பு!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் கடந்த 3ஆம் தேதி அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமாய் மறைந்தது. விமானம் மாயமாகி ஒரு வாரம் ஆகியும் இந்த விமானம் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால் இந்திய விமானப்படை அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மாயமான ஏ.என்.32 ரக விமானம் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.5 லட்சம் வெகுமதி என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இதன்பின்னராவது மாயமான விமானம் குறித்து ஏதாவது தகவல் கிடைக்குமா? என இந்திய விமானப்படை காத்திருக்கின்றது.
 
அருணாச்சல பிரதேச மாநிலம் சீன எல்லையில் இருப்பதால் மாயமான விமானம் சீன நாட்டிற்குள் விழுந்திருக்கலாம் என்ற கோணத்திலும் தேடுதல் பணி நடந்து வருகிறது. விமானத்தின் ஒரு சிறுபகுதி கூட கிடைக்காததால் பல்வேறு சந்தேகங்கள் இந்த விஷயத்தில் இந்திய விமானப்படைக்கு ஏற்பட்டுள்ளது. 
 
மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த MH370 என்ற விமானம் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி கோலாலம்பூரிலிருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங்குக்கு செல்லும் வழியில் மாயமானது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் விமானத்துக்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும்  எந்தவித விபரங்களும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது