பிரதமர் மோடியை திடீரென சந்தித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் : போர் குறித்து ஆலோசனையா?
பிரதமர் நரேந்திர மோடியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று இரவு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 இந்தியர்கள் பலியானதை தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
தற்போது நாட்டில் எழுந்துள்ள உணர்வுப் பொங்கும் சூழ்நிலையை பிரதிபலிக்க, சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பகவத் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. மத அடிப்படையில் மக்களை தேர்ந்தெடுத்து, பின்னர் கொலை செய்துள்ளார்கள். இந்து சமூகம் இதுபோன்ற கொடுமைகளில் ஈடுபடுவதில்லை. நம் மனங்களில் காயம் உள்ளது. நாம் மிகுந்த கோபத்தில் இருக்கிறோம், என்றார்.
மேலும், சிலர் தீய வழியில் செல்கிறார்கள் என்றால், அவ்வாறு நெறிமுறைகள் மீறுபவர்களுக்கு தக்கபடி பதிலடி கொடுப்பது ஒரு அரசின் கடமை. மக்களின் பாதுகாப்பே ஒரு மன்னனின் முதல் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.
இந்தக் கருத்துகள், பிரதமருடன் நிகழ்ந்த சமீபத்திய சந்திப்பிலும் பகவத் மீண்டும் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. மேலும் போர் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதேநேரம், நேற்று நடந்த உயர்மட்ட ராணுவ ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்வினை நடவடிக்கைகள் மேற்கொள்ள பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறைக்கு முழுமையான சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும், அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Edited by Mahendran