இன்னும் 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும்: பாகிஸ்தான் அமைச்சர்..!
ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பெரும் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
இந்த சூழ்நிலைக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயராதிகார ராணுவத்தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன்பின், எதிர்வினை அளிக்க முப்படை தளபதிகளுக்கு முழுமையான சுதந்திரம் ராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தியா அடுத்த 24 மணி முதல் 36 மணி நேரத்துக்குள் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறது என பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்புடையதாக இந்தியா குற்றஞ்சாட்டுவது முற்றிலும் ஆதாரமற்றது என்றும், இதன் மூலம் எதிர்கால ஆக்கிரமிப்பை தக்கவைக்க இந்தியா இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அத்துடன், பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடே என்றும், இந்தியாவின் குற்றஞ்சாட்டல்களை முழுமையாக மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் சம்பவம் குறித்து ஒரு சுதந்திரமான மற்றும் சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் யோசனையை இந்தியா நிராகரித்து, மோதலை தேர்வு செய்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
Edited by Mahendran