ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்: பதவியேற்பு எப்போது?
சமீபத்தில் நடைபெற்ற ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஒரே ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனித்து நின்று போட்டியிட்டு 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சுமார் 50 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி தற்போது ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் எனவே தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் சற்று முன் ஆளுனரை சந்தித்த ஹேமந்த் சோரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
இதனை அடுத்து அவர் வரும் 29ஆம் தேதி ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்பார் என அவரது வட்டாரங்கள் கூறுகின்றன. ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து முக ஸ்டாலின், மேற்கு வங்கத்திலிருந்து மம்தா பானர்ஜி உட்பட பல மாநில தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது