வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (19:36 IST)

ஜார்கண்ட்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி: அமைதியான பாஜக!

ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அதிகளவில் முன்னிலை பெற்றுள்ளதால் பாஜக பெரும் பின்னடவை சந்தித்திருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சக கட்சிகளான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ஆர்ஜேடியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. ஜார்க்கண்டில் தற்போது ஆளும் பாஜக கட்சி தனித்து நின்று போட்டியிட்டது.

கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸோடு கூட்டணி வைத்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு இடத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது.

தனித்து நின்று தேர்தலை எதிர் கொண்ட பாஜக 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதில் 10 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணிகள் அதிக பெரும்பான்மையில் இருப்பதால் அவை கிட்டத்தட்ட வெற்றிபெற்றது உறுதியாகி விட்டது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. இதற்கான ஆட்சியமைக்கும் உரிமையை விரைவிலேயே ஹேமந்த் சோரன் கோர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.