1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (19:52 IST)

ஜார்கண்ட்: பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைய இவைதான் காரணம் #3MinsRead

ஜார்கண்டில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவி இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஆட்சியை இழக்கிறது.

சரி. பா.ஜ,கவின் இந்த தோல்விக்கு என்ன காரணம்? ஏன் தொடர்ந்து தோல்வியைத் தழுவுகிறது?

இந்தக் கட்டுரையில் 5 காரணங்களை தொகுத்துள்ளோம்.

சரிந்த பிம்பம், ஈகோ, செவிமடுக்காத குணம்

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டு பா.ஜ.க ஆட்சி பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக மாநில முதல்வர் ரகுபர் தாஸ் மோசமாகப் பெயரெடுத்திருந்தார். இதுதான் பா.ஜ.க தோல்விக்கு முதன்மையான காரணம். கட்சிக்கு உள்ளேயே அவர் மீது அதிருப்தி நிலவியது. ஈகோ பார்க்கிறார், நியாயமான ஆலோசனைகளுக்கு செவிமடுக்க மறுக்கிறார் என கட்சிக்காரர்களே அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

குறிப்பாக ஜார்கண்ட் பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சரயூ ராய் தொடர்ந்து ரகுபர் தாஸுடன் முரண்பட்டு வந்தார். கட்சியும் சரயூ ராயின் கோபத்தை தணிக்க முயலவில்லை. மோதி, அமித் ஷா என கட்சி தலைவர்கள் தொடர்ந்து ரகுபர் தாஸுக்கே ஆதரவளித்து வந்தனர். இதனால் கோபமடைந்த ராய், ஒரு கட்டத்தில் அரசியல் களத்தில் தாஸை நேரடியாக எதிர்த்தார்.

நில கையகப்படுத்தும் சட்டம்

நில கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வர முயன்றது பழங்குடி மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

பெருநிறுவனங்களுக்காக பழங்குடி மக்கள், தலித்துகளிடமிருந்து அரசு நிலத்தை அபகரிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஒரு தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்துக்காக நிலத்தை கைப்பற்றுவதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என அந்த நிறுவனம் குற்றஞ்சாட்டியது.

கும்பல் கொலை, பசி, பட்டினி இன்னும் பிற

கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறுபான்மை மக்கள், தலித்துகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களும், கும்பல் கொலைகளும் இந்த தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணம்.

எதிர்க்கட்சிகளின் பிரசார கூட்டத்தில் இவை பற்றி பேசப்பட்டது. இதற்கு ரகுபர் தாஸ் கூறிய பதில்கள் திருப்திகரமாக இல்லை என மக்கள் நினைத்தார்கள். குறிப்பாக மதமாற்ற தடை சட்டம் குறித்து ரகுபர் தாஸ் பேசிய கருத்துகள் கிறிஸ்தவ சமூகத்தை கோபமடைய செய்தது.

இவற்றுக்கெல்லாம் மேலாக அங்குப் பரவலாக நிலவிய வறுமை மக்களிடையே கொதிப்பலைகளை உண்டாக்கியது. வெற்று வார்த்தைகள் வயிற்றை நிரப்பாது என மக்கள் கருதியதும் தோல்விக்கு ஒரு காரணம்.

வேலைவாய்ப்பின்மை

தேர்தல் பிரசாரத்தின்போது, ஒன்பது கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோதி பங்கெடுத்தார், அமித் ஷா 11 கூட்டங்களில் உரையாற்றினார், ரகுபர் தாஸ் 51 கூட்டங்களில் கலந்துகொண்டார். இவ்வளவுக்கு பின்பும் பா.ஜ.க தோல்வி அடையக் காரணம், 'வேலைவாய்ப்பின்மை'தான்.

மக்கள் வாக்குறுதிகள் வேண்டாம், வேலை தாருங்கள் என்றார்கள். ஆனால், கடந்த ஐந்தாண்டு கால ரகுபர் தாஸ் ஆட்சியின் திட்டங்களால் வேலைவாய்ப்புகளை பெருக்க முடியவில்லை.

பிரசாரங்களில் பேசிய மோதியும், ராமர் கோயில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசினாரே அன்று, உள்ளூர் பிரச்சனைகள் குறித்து பேசவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் உள்ளூர் பிரச்சனையை முதன்மையாக்கின.

அதிருப்தி ஏற்படுத்திய சட்டத்திருத்த மசோதாக்கள்

ஜார்கண்டில் வாழும் பழங்குடிகளின் நிலம் சார்ந்த உரிமைகளை பாதுகாப்பதற்காக என்று கூறி சோட்டானக்பூர் குத்தகை சட்டம், சந்தல் பர்கானா குத்தகை சட்டம் ஆகியவற்றில் சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கு பாஜக தலைமையிலான அம்மாநிலத்தின் முந்தைய அரசு முயற்சி செய்தது. இது பாஜக மீது பழங்குடி மக்கள் இடையே பெரும் அதிருப்தி ஏற்படுவதற்கு வழிவகுத்தது.

இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலையும் மீறி, அதை விடாப்பிடியாக நிறைவேற்றிய பாஜக அரசு, மேலதிக ஒப்புதலுக்காக அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது.

அதைத்தொடர்ந்து இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு மென்மேலும் எதிர்ப்புகள் அதிகரிக்கவே, அதில் கையெழுத்திடாமலேயே மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர். அதன் பிறகு, இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளும் பணிகள் கைவிடப்பட்டது. இருப்பினும், இதுகுறித்த தவறான தகவல்கள் அம்மாநில பழங்குடி மக்களிடையே பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பழங்குடிகளின் நலனுக்காகவே ஜார்கண்டில் இந்த சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற முனைந்தோம் என்ற கருத்தை பரப்புவதற்கு பாஜக தவறிவிட்டது.