1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (06:34 IST)

விதைத்தது விளைந்துள்ளது: ப.சிதம்பரம் கைது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்றிரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கைதுக்கு ஒருபக்கம் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஒருசில அரசியல்வாதிகள் இந்த கைது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
ப.சிதம்பரம் கைது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து கூறியபோது, 'நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் செய்தவர் எப்போதும் நான் குற்றம் செய்தேன் என்று ஒத்துக்கொள்வதில்லை என்றும், எதிர்க்கட்சிகளின் போராட்டங்களையெல்லாம் கண்டு மத்திய அரசு அஞ்சாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்த கைது நடவடிக்கை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியபோது, 'ப.சிதம்பரம் விதைச்சது விளைந்திருக்கிறது' என்றும், ப.சிதம்பரம் மீது குற்றம் செய்திருப்பதால் பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக ப.சிதம்பரம் அவர்களை சிபிஐ தேடிக்கொண்டிருந்தபோது துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி கிண்டல் பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ப.சிதம்பரம் பல்வேறு தோற்றங்களில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, அந்த புகைப்படங்கள் தனக்கு வாட்ஸ் அப் மூலம் கிடைத்ததாகவும், இந்த உருவங்களில் யாரையாவது கண்டால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் குருமூர்த்தி கூறியுள்ளார்.