வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2020 (13:07 IST)

இனிமேல் ஃப்ரீ இண்டர்நெட் கிடையாது: கூகுள் எடுத்த அதிர்ச்சி முடிவு!

இந்தியா முழுவதிலும் உள்ள பல முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை அளித்து வந்த கூகிள் நிறுவனம் தற்போது அந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

2015ம் ஆண்டில் பிரதமர் மோடியுடன் இணைந்து கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை இந்திய ரயில்நிலையங்களில் இலவச வைஃபை இண்டர்நெட் அளிக்கும் சேவையை தொடங்கியது. 2016ம் ஆண்டில் ’ரயில் டெல்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைஃபை இண்டெர்நெட் சேவையை தொடங்கியது கூகிள்.

கடந்த 5 ஆண்டுகளாக பல ரயில் நிலையங்களில் இலவச இணைய வசதி இருந்து வருகிறது. இருந்தாலும் ஜியோ உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களின் வருகையாலும், குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் அளவற்ற இணைய வசதியாலும் ரயில் நிலையங்களில் உள்ள இலவச இணைய சேவையை பலர் பயன்படுத்துவதில்லை.

மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால் ரயில் நிலைய இலவச இணைய சேவையிலிருந்து விலகி கொள்ள போவதாக கூகிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் கூகிளுடன் இணைந்து இந்த சேவையை வழங்கி வந்த ‘ரயில் டெல்’ தொடர்ந்து இந்த சேவையை தொடரப்போவதாக அறிவித்துள்ளது.