திரைப்பட கல்லூரி தலைவர் கருத்தால் ’சர்ச்சை’
குருவைக் கொண்டாடும் குருகுல கல்வி முறையே தேவை என இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவர் கஜேந்திர சவுஹான் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கஜேந்திர சவுஹான், "பாரத மாதாவின் முந்தைய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நம்பிக்கை களையுமே நாம் இன்றைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டியுள்ளது.
அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுகளை கொண்ட ஆசிரியர்களை நாம் உருவாக்க வேண்டும். நமது பழைய கல்வியமைப்பு முறையிலான குருகுல கல்வியமைப்பே இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றும்” என தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்திற்கு கடும்கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆர்எஸ்எஸ் ஊழியரான கஜேந்திர சவுஹான், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, புனே நகரில் அமைந்துள்ள இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கஜேந்திர சவுஹான் கடந்த 2004ஆம் ஆண்டு பாஜகவின் உறுப்பினராக தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு அரசியல் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த உயர் பொறுப்பிற்கு வருவதற்கு அடிப்படைத் தகுதியாக திரைப்படத் தொழிலில் 35 ஆண்டுகால அனுபவம் மற்றும் சிறந்த ஆளுமையாக விளங்கியிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய தகுதி இல்லாமலேயே இப்பொறுப்பில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.