வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2019 (12:52 IST)

உணவு பொருள் பாக்கெட்டுகள் எல்லாவற்றிலும் தள்ளுபடி தரவேண்டும்? – மத்திய அரசின் புதிய சட்டம்

உணவு பொருள் பாக்கெட்டுகளில் அது உண்ணப்பட வேண்டிய நாளை குறிப்பிட வேண்டும். குறிப்பிடப்பட்ட நாளுக்கும் மேல் விற்றால் தள்ளுபடி எவ்வளவு என்பதையும் குறிப்பிட வேண்டும் என புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இந்தியா முழுவதும் பரவலாக விற்கப்பட்டு வருகின்றன. அந்த உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில் அதிகபட்ச விலை மற்றும் காலாவதியாகும் தேதி மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.

உதாரணமாக, ஒரு உணவு பொருள் 6 மாதங்களில் காலாவதியாகும் என்று வைத்துக் கொண்டால், அந்த உணவை உண்ணலாம் என்று நிர்ணயிக்கப்படும் காலம் 4 மாதங்களாக இருக்கும். இது உணவுப் பொருளை பொறுத்து மாறுபடும். இந்த உண்ணப்படும் காலமான 4 மாதங்களுக்குள் விற்கப்பட்டால் ஒரு விலையும், அந்த நிர்ணய அளவை தாண்டிய பிறகு காலாவதி தேதி வரை விற்றால் தள்ளுபடி விலையையும் தர வேண்டும். அந்த நிகர விலை மற்றும் தள்ளுபடி விலை இரண்டையுமே உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் குறிப்பிட வேண்டும் என்ற புதிய நிபந்தனைகளைதான் மத்திய அரசின் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் செயல்படுத்த உள்ளது.

மேலும் உண்ணப்படும் காலம் என்று குறிப்பிடக்கூடிய நாளுக்கு பிறகு அதை உண்டால் மக்களுக்கு எந்த தீங்கும் இல்லை என்பதையும் உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் பல உணவுப் பொருள் நிறுவனங்களே காலாவதி தேதிக்குள் பொருட்களை விற்க தள்ளுபடி அளிக்கின்றனர். அவர்களுக்கு இந்த முறை உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதன்மூலம் உணவுப்பொருள் தரமானதா என்பதை மக்கள் அறிந்து கொண்டு, தள்ளுபடியையும் பெற முடியும் என கூறப்படுகிறது.