வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (16:11 IST)

பதக்கத்திற்காக வெள்ளத்தில் நீந்தி சென்று சாதனை புரிந்த மாணவர்

கர்நாடகாவில் மாணவர் ஒருவர் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இரண்டரை கிலோமீட்டர் தூரம் வெள்ளத்தில் நீந்தி சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கிராமமான மன்னூரை சேர்ந்தவர் நிசான் மனோகர் காதம். 12ம் வகுப்பு படிக்கும் இவருக்கு குத்துச் சண்டை போட்டிகளில் ஆர்வம் அதிகம். பெலகாவி மாவட்ட குத்துச்சண்டை சங்கத்தில் இருக்கிறார் நிசான்.

பெங்களூரில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ள இருந்தார் நிசான். இந்நிலையில் கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் அவர்களது கிராமமே வெள்ளக்காடானது. அந்த கிராமத்திலிருந்து வெளியூர் செல்ல இருக்கும் மூன்று பிரதான சாலைகளும் வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கின.

எப்படியும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் துடிப்பாய் இருந்தார் நிசான். தனக்கு தேவையான பொருட்களை ஒரு பையில் கட்டிக்கொண்டு வெள்ளத்தில் குதித்து நீந்த தொடங்கினார். அவருடன் அவரது தந்தையும் நீந்தி சென்றார். சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக நீந்தி 2.5 கிலோமீட்டர் தூரத்தை கடந்து தனது குழுவோடு இணைந்தார் நிசான்.

பிறகு போட்டியில் கலந்து கொண்ட அவர் வெற்றிபெற்று வெண்கல பதக்கத்தை பெற்றார். இதுகுறித்து அவர் “இது என்னுடைய வாழ்நாள் கனவு. எந்த காரணத்திற்காகவும் இதை நான் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இந்த முறை வெள்ளிப்பதக்கம்தான் வெல்ல முடிந்தது. அடுத்த முறை கண்டிப்பாக தங்கபதக்கம் வெல்வேன்” என கூறியுள்ளார்.

தனது லட்சியத்திற்காக வெள்ளத்தையும் பொருட்படுத்தாது நீந்தி சென்று சாதனை புரிந்த மாணவரை அந்த ஊர் மக்கள் வாழ்த்தியுள்ளனர்.