1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 நவம்பர் 2022 (09:50 IST)

தெலங்கானாவில் "ஷிண்டே மாடல்” அரசாங்கம் – பாஜக முகத்திரை கிழிப்பு?

தெலங்கானாவில் "ஷிண்டே மாதிரி" அரசாங்கத்தை அமைப்பதற்காக பாஜக தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவை நாடியதாக குற்றச்சாட்டு.


தெலங்கானாவில் "ஷிண்டே மாதிரி" அரசாங்கத்தை அமைப்பதற்காக பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கமான அமைப்புகள் தன்னை அணுகியதாக தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவின் மகள் கல்வகுந்தலா கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.

ஷிண்டே-மாடல் என்பது மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசாங்கத்திற்கு ஆதரவை வாபஸ் பெற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் உள்ள ஒரு பிரிவைக் கவர்ந்து ஆட்சி அமைக்க பாஜக பயன்படுத்தும் உத்தியைக் குறிக்கிறது.

பாஜகவின் நண்பர்கள் மற்றும் அவர்களுக்கு நட்புறவான அமைப்புகள் என்னைக் கட்சியில் சேரச் சொல்லியும் ‘ஷிண்டே மாடல்’என்ற மாதிரியை முன்வைத்தும் என்னிடம் பேச்சுவார்த்தைகள் வந்துள்ளன. தெலுங்கானா மக்கள் தங்கள் சொந்த கட்சிகளுக்கும், தங்கள் தலைவர்களுக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள் என்று நான் கூறினேன்.
பின்வாசல் வழியாக அல்ல, சொந்த பலத்தில் தலைவர்களாக மாறுவோம் என கூறி மிகவும் கண்ணியமாக நிராகரித்துள்ளோம் என்று கவிதா கூறினார். இருப்பினும் தன்னை அணுகிய நபர்களின் பெயரை அவர் கூற மறுத்துவிட்டார். பாஜகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மறுத்ததாக கூறிய கவிதா, அந்த திட்டத்தை நிராகரிப்பதால் ஏற்படும் விளைவுகளை தைரியமாக எதிர்கொள்வேன் என்றும் கூறினார்.

முன்னதாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், மாநிலத்தில் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்பில்லை ஆனால் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான ஆயத்தங்களைத் தொடங்குமாறு தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

Edited by: Sugapriya Prakash