முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் !
சர்வதேச விமான நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஏர் இந்தியாவுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப . சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது, சர்வதேச விமான நிறுவனங்களுக்கு சாதகமான விமான வழித்தடங்கள் மற்றும் நேர ஒதுக்கீடு செய்ததால், இந்திய அரசின் பொதுத்துறையை சேர்ந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் இம்முறைகேடு தொடர்பாக ஏற்கனவே முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.