1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (07:34 IST)

2 மணி நேரத்தில் ஆஜராக சிபிஐ கெடு: ப.சிதம்பரத்திற்கு மேலும் சிக்கல்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து அவரை கைது செய்ய நேற்று சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்றனர். ஆனால் அவர் வீட்டிலும் இல்லை, செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், ப.சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நோட்டீஸை ஒட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 2007ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், நிதி திரட்ட விதிமுறைகளை மீறி ஒப்புதல் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து அவர்மீது கடந்த 2017ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த  2018 ஆம் ஆண்டு சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் ப.சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்தது. 
 
இந்த வழக்கு அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தன்னை கைது செய்வதை தடுக்க ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பினர் முன் ஜாமீன் அளிக்க எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் நேற்றிரவு ப.சிதம்பரம் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது
 
ப.சிதம்பரம் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அவர் வீட்டில் இல்லை என்று அறிந்தவுடன் அடுத்த 2 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரம் வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு திரும்பினர். இந்த நிலையில் ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று காலை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது