செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (15:06 IST)

பெண் மருத்துவர் படுகொலை விவகாரம்.! மம்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி எம்.பி ராஜினாமா..!!

Mamtha MP Resign
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநிலங்களவை எம்.பி., ஜவஹர் சர்கார் ராஜினாமா செய்தார்.  
 
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள  ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. 
 
இந்நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி. ஜவஹர் சர்கார் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஊழல் அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளில் உயர் பதவிகளை பெறுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். 
 
மேற்குவங்க அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.  ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த பயங்கரமான சம்பவத்தில் இருந்து ஒரு மாதம் காலமாக நான் பொறுமையாக இருந்தேன் என்றும்  மம்தாவின் பழைய பாணியில் அவர் நேரடி தலையீட்டு நடவடிக்கை எடுப்பார் எதிர்பார்த்தேன் என்றும் அது நடக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

MP Resign
மம்தா மீது அதிருப்தி:
 
இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி உடன் தனிப்பட்ட முறையில் பேச முயற்சி செய்தேன். அதுவும் நடக்கவில்லை என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  3 ஆண்டுகளாக மேற்குவங்க மாநில மக்கள் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்ப நீங்கள் எனக்கு அளித்த வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 
நான் விரைவில் டில்லி சென்று மாநிலங்களவை தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டு, அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்று கடிதத்தில் ஜவஹர் சர்கார் குறிப்பிட்டுள்ளார்.