1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (07:29 IST)

இத்தாலிக்கு திரும்பி செல்லுங்கள்: ராகுல்காந்திக்கு எதிராக விவசாயிகள் கோஷம்

பாராளுமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். 3வது அணியினர்களும், பாஜக தலைவர் அமித்ஷாவும் சமீபத்தில் கொல்கத்தாவில் பேரணி நடத்திய நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதிக்கு நேற்று ராகுல்காந்தி சென்றார். காங்கிரஸ் நிர்வாகிகளுடன் முதலில் ஆலோசனை நடத்திய ராகுல்காந்தி அதன்பின்னர், கவுரிகஞ்ச் என்ற இடத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்திலும் பங்கேற்றார்.

அப்போது அதே பகுதியில் போராட்டம் நடத்தி கொண்டிருந்த விவசாயிகள் திடீரென ராகுல்காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் புகுந்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அமேதி தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதாக கூறி வாக்குகள் பெற்ற ராகுல்காந்தி, இந்த தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும், அதனால் அவர் இத்தாலிக்கே திரும்பி செல்லட்டும் என்றும் கோஷமிட்டனர்.

மேலும் கடந்த 1986ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது விவசாயிகளிடம் இருந்து தொழிற்பேட்டைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அங்கு தொழிற்பேட்டையும் தொடங்கவில்லை கையகப்படுத்திய நிலத்தையும் திருப்பி தரவில்லை என்றும் கோஷமிட்டனர், ராகுல்காந்திக்கு எதிராக திடீரென விவசாயிகள் கோஷமிட்டதால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது