வீட்டிற்குள் செல்ல பாதையில்லை.. ஹெலிகாப்டர் வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்த விவசாயி..!
தனது வீட்டிற்குள் செல்ல வழியில்லை என்றும், தனது வீட்டைச் சுற்றியுள்ள பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே தனது வீட்டிற்குள் சென்று மீண்டும் திரும்பி வர ஹெலிகாப்டர் வேண்டும் என்றும், ஒரு விவசாயி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில், கலெக்டரின் குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் நடைபெறுகிறது. இந்த முகாம் நடைபெற்ற போது, ஒரு விவசாயி தனக்கு ஹெலிகாப்டர் தேவை என்று மனு சமர்ப்பித்ததை தொடர்ந்து பரபரப்பான நிலை உருவானது.
கலெக்டர் மனுவை படித்தபோது, அதில் விவசாயி குறிப்பிட்டிருந்ததாவது: "சிலர் தனது வீட்டிற்குச் செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தனது வீட்டிற்குள் நுழையவோ, வீட்டை விட்டு வெளியேறவோ முடியவில்லை. எனவே, வீட்டிற்குள் சென்று திரும்பி வர ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். மேலும், இந்தப் பிரச்சினை குறித்து அவர் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த விசித்திரமான மனுவை பார்த்த கலெக்டர், மூன்று நாட்களுக்குள் விவசாயியின் வீட்டைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவிட்டார். இந்த வித்தியாசமான மனு மூலம் கலெக்டர் அலுவலகத்தில் அந்த விவசாயி பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva