ஆன்லைன் மூலம் திருப்பதி லட்டு விற்பனை – போலி இணையதளம் முடக்கம்!
திருப்பதி தேவஸ்தான லட்டு வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என விளம்பரம் செய்த போலி இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் பணம் செலுத்தினால் திருப்பதி பிரசாதம் நேரடியாக வீட்டுக்கே அனுப்பப்படும் என இணையதளம் ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டது.
அந்த விளம்பரத்தில் ஒரு முறை மட்டும் ஒரு லட்டை டோர் டெலிவரி செய்ய ரூ.500 என்றும், ரூ.5,000 செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்டுக்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், ரூ.9600 செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா இரண்டு லட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த விளம்பரங்கள் பற்றி திருப்பதி தேவஸ்தானத்துக்கு தகவல் வரவே அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த இணையதளத்தை முடக்கியுள்ளனர்.