வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2016 (11:47 IST)

கருப்புப் பணத்தை மாற்ற 37% கமிஷன் வாங்கும் அமித்ஷா? - வீடியோ ஆதாரம்?

ரூபாய் நோட்டு விவகாரத்தை பிரதம் மோடி முன்பே சிலருக்கு தெரிவித்து விட்டதாகவும், கருப்புப் பணத்தை புதிய நோட்டுகளாக மாற்றித்தர பாஜக தலைவர் அமித்ஷா கமிஷன் பெறுவதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.


 

 
பிரதமர் மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்த போது, அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் யாதின் ஓசா. இவர் அப்போது பாஜக கட்சியின் எம்.எல்.ஏ வாக இருந்தவர்.  இவர் தற்போது ஆம் ஆத்மி கட்சியில் உள்ளார். 
 
இவர் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உங்கள் அறிவிப்பை கேட்டு நான் மிகழும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், அந்த மகிழ்ச்சி சிறிது நேரத்தில் முடிந்துவிட்டது.
 
உங்களிடம் ஏற்கனவே நான் பணியாற்றியுள்ளேன். அதைவைத்து நான் யோசித்த போது, 50 சதவீதம் கருப்பு பணத்தை வைத்திருக்கும், உங்களுக்கு நெருக்கமான தொழில் அதிபர்களுக்கு இது முன்னதாக தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகம் அடைந்தேன். அது குறித்து நான் நடத்திய விசாரணையில், மக்களை முட்டாள்கள் ஆக்கியுள்ள உங்களின் நோக்கத்தை புரிந்து அதிர்ச்சி அடைந்தேன்.


 

 
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, அமித்ஷா மற்றும் அவரது ஆட்கள், கமிஷன் வாங்கிக் கொண்டு கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி தரும் பணியில் மும்முரமாக உள்ளனர் என்பது எனக்கு தெரிய வந்தது. அதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. தேவைப்பட்டால் அதை வெளியிட தயாராக இருக்கிறேன்.
 
அதாவது, ஒரு கோடி கருப்புப் பணத்திற்கு 37 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது. இதற்காக, அமித்ஷா அலுவலகம் மற்றும் வீடுகளில் கருப்புப் பண பதுக்கல்காரர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். 
 
அந்த வீடியோவை முதலில் பத்திரிக்கையாளர்களிடம் காட்டுகிறேன். அதன் பின் உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன். அதில் உள்ள நம்பகத்தன்மையை நீங்கள் ஆராயலாம்” என யாதிஸ் ஓசா குறிப்பிட்டுள்ளார்.
 
குஜராத்தை சேர்ந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ, அதுவும் மோடிக்கு நெருக்கமாக இருந்தவரே மோடி மற்றும் அமித்ஷா பற்றி புகார் கூறியிருக்கும் விவகாரம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.