போதையில் சாலையில் இருந்த இளம்பெண்: காவல்துறையினர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!
சாலையில் போதை தலைக்கேறி சுயநினைவு இல்லாமல் இருந்த இளம்பெண் ஒருவரை அவருடைய பாதுகாப்புக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பெண் எஸ்.ஐ, மற்றும் காவலர்களை தாக்கி தப்பி ஓட அந்த போதை இளம்பெண் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் காவல்துறையினர் இரவில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் குடிபோதையில் சாலையின் ஓரத்தில் விழுந்து கிடந்தார். இதனையடுத்து அந்த பெண்ணின் பாதுகாப்புக்காக அவரை காவல் நிலையத்திற்கு தூக்கி வந்து படுக்க வைத்திருந்தனர்.
இந்த நிலையில் மறுநாள் காலையில் போதை தெளிந்த பின் எழுந்த அந்த இளம்பெண் தான் காவல்நிலையத்தில் இருப்பதை அறிந்ததும், ‘என்னை எதற்காக காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள்; என்று கேட்டு அங்கு பணியில் இருந்த பெண் எஸ்ஐ மற்றும் பெண் கான்ஸ்டபிள்கள் ஆகியோர் மீது ஆவேசமாக தாக்குதல் நடத்தி தப்பி ஓட முயன்றார்.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த லீசா என்பதும், ஐதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை எச்சரித்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது