வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (15:12 IST)

சாலையில் விழுந்த கொடி கம்பம்..தடுமாறி விழுந்த இளம்பெண், சுபஸ்ரீயை தொடர்ந்து மேலும் ஒரு விபத்து

சுபஸ்ரீ மரணம் போல் சாலை ஓரத்தில் இருந்த கட்சி கொடி விழுந்ததில் தடுமாறிய இளம்பெண்ணை, பின்னால் வந்த லாரி ஏறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது கட்சி பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இது போல் மீண்டும் ஒரு சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவையில் முதல்வரின் வருகையை ஒட்டி, பீளமேடு பகுதியில் அமைந்துள்ள அவினாசி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கட்சியின் கொடி கம்பம், அச்சாலையில் ஒரு பெண் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது சாலையில் விழுந்தது. இதனை கண்ட அப்பெண் பைக்கை நிறுத்த முயற்சித்து தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அவர் மேலே ஏறியதில் இரு கால்களும் நசுங்கின. மேலும் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்ததில் மற்றோரு இளைஞரும் காயமடைந்தார்.

இதனை தொடர்ந்து சாலையில் மயக்கமடைந்த நிலையில் இருந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் காயமடைந்த இளைஞரையும் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் மீது கட்சி பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், கோவையில் கட்சி கொடிக்கம்பம் சாய்ந்து ஒரு பெண்ணுக்கு கால்கள் நசுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.