கடலில் மிதந்து வரும் போதை பொருட்கள் – குழப்பத்தில் போலீஸ்!
பிரான்ஸ் நாட்டு கடற்கரையில் நாள்தோறும் போதை பொருட்கள் வந்து குவிவதால் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நகரின் மேற்கு பகுதி முதல் தெற்கே ஸ்பெயின் எல்லை வரையான கடல்பகுதிகளில் நாள்தோறும் கிலோ கணக்கில் போதை பொருட்கள் கடலில் மிதந்து வந்து குவிகின்றன. அவற்றை எடுத்து ஆய்வு செய்ததில் அவை மிகவும் வீரியமிக்க கொக்கைன் போதை பொருட்கள் என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீஸார் அந்த பகுதிகளில் பொதுமக்கள் நுழைய தடை விதித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்துள்ள போலீஸார் இதுவரை 800 கிலோவுக்கும் அதிகமான போதை பொருட்களை கடற்கரையிலிருந்து அகற்றியிருப்பதாக கூறியுள்ளனர். இவற்றின் உத்தேச மதிப்பு 90 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடலில் மிதந்து வரும் இந்த போதை பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து அமெரிக்க போதை தடுப்பு பிரிவுடன் சேர்ந்து பிரான்ஸ் ஆய்வு செய்து வருகின்றது.