வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (17:10 IST)

வரதட்சணை தொடர்பான வழக்கு - சுப்ரீம் கோர்ட் அதிரடி

திருமணமான பெண்களுக்கு இழைக்கப்படும் வரதட்சணை கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் உச்ச நீதி மன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருமணமான பெண்களிடம் கணவன் வீட்டார் நகை ,பணம் போன்ற வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தும் சட்டப்பிரிவான 498ஏ தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்ற 2015ம் வருடம் ஜூலை மாதம் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பில் வந்துள்ள புகார் மீது எந்த அளவு உண்மை உள்ளது என்பதை சோதித்துப் பார்க்காமல் எவரையும் கைது செய்யக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தது.

வரதட்சணை தொடர்பாக மாவட்ட ரீதியாக குழு அமைத்து அந்த குழு கொடுக்கின்ற கருத்துக்களின் அடிப்படையிலேயே காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறியிருந்தது.

அதனையடுத்து இந்த ஆணையை மாற்ற வேண்டுமென்று பலர் மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு  வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: முதலில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியிருந்த தீர்ப்பை மாற்றி வரதட்சணை  தொடர்பாக எப்போது புகார் வந்தாலும் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் புகார் கூறுவோருக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதே நேரம் குற்றத்திற்கு காரணமானவர்களுக்கு முன் ஜாமீன் வழங்குவது பற்றி உரிய கோர்ட்டுகள் முடிவு செய்து கொள்ளலாம்.

இது சம்பந்தமாக மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்க வேண்டியதில்லை என்று கூறி ஏற்கனவே இரு நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பை மாற்றி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.