திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 23 நவம்பர் 2016 (12:17 IST)

சாதாரண மக்களுக்கு கள்ள நோட்டுக்கும், நல்ல நோட்டுக்கும் வித்தியாசம் தெரியுமா?

மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் சாதாரண மக்களுக்கு கள்ள நோட்டுக்கும், நல்ல நோட்டுக்கும் வித்தியாசம் தெரியாது என்று கூறப்பட்டுள்ளதை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் சுட்டுக்காட்டி உள்ளார்.


 

இது குறித்து கூறியுள்ள சி.பி.கிருஷ்ணன், “வங்கிகள் முன்பு மக்களின் காத்திருத்தல் குறையவேயில்லை. தங்களுடைய பணத்தை எடுக்க பாம்பு போன்று நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருக்கிறார்கள். இதுவரை 9 வங்கி ஊழியர்கள் உட்பட 47 பேர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களை இவ்வளவு கடும் துயரத்திற்கு உள்ளாக்கும் மத்திய அரசு கறுப்புப் பணத்தை உண்மையிலேயே வெளிக்கொண்டு வருமா என்பதுதான் அனைவரின் மனதிலும் உள்ள பிரதான கேள்வி. 2,000 ரூபாய் நோட்டு எதற்காக?

மத்திய அரசின் நிதியமைச்சகம் 8ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘அதிக மதிப்புள்ள நோட்டுக்கள்தான் கறுப்புப் பணத்தை உருவாக்குவதற்கு உதவி செய்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

அப்படியென்றால் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டை ஒழித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் கொண்டு வருவது எந்த நோக்கத்திற்காக? இது மேலும் கறுப்புப் பணத்தை உருவாக்குவதற்கு உதவி செய்யாதா?

94 சதவீத கறுப்புப் பணத்தை வெளிக்கொணர என்ன வழி?:

கறுப்புப் பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை கட்டாமல் உருவாக்கக்கூடிய பணம்; மேலும், சட்ட விரோத நடவடிக்கைகளின் மூலமாகவும் கறுப்புப் பணம் உருவாகிறது. கறுப்புப் பணத்தின் உருவாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளாமல் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு எந்தவித பலனையும் தராது.

கடந்த 5 ஆண்டுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் வெளிவந்த தகவல்படி மொத்த கறுப்புப் பணத்தில் பணமாக வைத்திருக்கும் தொகை 5 முதல் 6 சதவீதம் மட்டுமே. மற்றவையெல்லாம் தங்கக் கட்டி, தங்க நகை, உள்நாட்டில் வெளிநாட்டில் அசையா சொத்துக்கள், வெளிநாட்டு பணம் போன்றவையாகத்தான் உள்ளது’ என்று பிரபாத் பட்நாயக் உள்ளிட்ட பிரபல பொருளாதார அறிஞர்கள் தங்கள் கூட்டறிக்கையில் தெரிவிக்கின்றனர்.

எந்த விதமான அடையாளத்தையும் தெரிவிக்காமல் பங்குச் சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து வெளிநாட்டுக்கு சுலபமாக கொண்டு செல்ல வழிவகுக்கும் ‘பங்கேற்பு பத்திரம்’ (Participatary Notes) இன்றளவிலும் தடை செய்யப்படவில்லை.

கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்புக்கு வழி வகுக்கும் மொரீஷியஸ், சைப்ரஸ் பாதைகள் அடைக்கப்படவில்லை. எச்.எஸ்.பி.சி. வங்கி வழியாக சுவிஸ் நாட்டில் உள்ள இந்தியர்களின் கறுப்புப்பணத்தை வெளிக் கொண்டு வர உடன்பாடு எட்டப்பட்டதாக சொல்லும் மத்திய அரசு, அவர்களின் பெயர்களைக்கூட வெளியிடத் தயாராக இல்லை.

கோடிக்கணக்கான ரூபாய் வருமான வரி, விற்பனை வரி பாக்கி வைத்திருக்கும் பெரு நிறுவனங்களிடமிருந்து அவற்றை வசூலிக்க எந்தவிதமான முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடவில்லை. அவர்களின் பெயர்களைக்கூட அதிகாரப்பூர்வமாக வெளியிட தயாராக இல்லை. எந்தவித தண்டனையும் இல்லாமல் தாமாக முன்வந்து கறுப்புப் பணத்தை வெளியிட மீண்டும் மீண்டும் அறிவிப்பது என்பது கறுப்புப் பணத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையே.

அத்தகைய நடவடிக்கையில்தான் மத்திய அரசு சமீபத்தில் கூட ஈடுபட்டுள்ளது. ஆக, 94 சதவீதம் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர இந்த அரசாங்கம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இந்த நடவடிக்கையால் கள்ளப் பணம் ஒழியுமா?:

மத்திய அரசின் இந்த நடவடிக்கை கள்ளப்பணத்தை (Fake Currency) ஒழித்துவிடும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கை கூறுகிறது. தேசிய புலனாய்வு நிறுவனத்தின் (NIA) சார்பாக கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி மொத்தபணத்தில் கள்ளப் பணம் ரூ. 400 கோடி அளவிற்கு மட்டுமே உள்ளது.

அதாவது செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களின் மொத்த மதிப்பான ரூ.14,18,000 கோடி மதிப்பில் இது வெறும் 0.028 சதவீதம் மட்டுமே.

மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில், ’சாதாரண மக்களுக்கு கள்ள நோட்டுக்கும், நல்ல நோட்டுக்கும் வித்தியாசம் தெரியாது’ என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் சாதாரண மக்கள் கள்ள நோட்டை, நல்ல நோட்டு என்று நம்பி அதற்கான பொருளோ, சேவையோ கொடுத்து விட்டார்கள் என்றுதான் அர்த்தம்.

அனைத்து வங்கிக் கிளைகளும் அனைத்து தபால் நிலைய கிளைகளும் கள்ளநோட்டை கண்டுபிடிக்கும் அளவிற்கு திறன் படைத்ததா என்பது ஒரு கேள்வி. அப்படியே அவர்களிடம் அதற்கான திறன் இருந்தாலும் சாதாரண நாட்களைவிட 10 பங்கு அளவிற்கு மக்கள் கூட்டம் வரும் நாட்களில் கள்ளநோட்டை பிரித்துக் கண்டறிய முடியுமா என்பது அடுத்த கேள்வி. ரிசர்வ் வங்கியிடம் உள்ளது போல தேர்ந்த தொழில்நுட்பம் உள்ள கள்ள நோட்டை கண்டுபிடிக்கும் கருவி அநேகமாக பல வங்கிகளிலோ, அஞ்சலகங்களிலோ இல்லை.

இவற்றையெல்லாம் மீறி கண்டுபிடிக்கும் கள்ள நோட்டுக்களால் நல்ல நோட்டு என்று நம்பி கையில் வைத்திருக்கும் பொதுமக்கள்தானே பாதிக்கப்படுவார்கள்? அப்படியானால் கள்ள நோட்டை எப்படி ஒழிப்பது? அதற்கு, அது அச்சடிக்கப்படும் இடத்திலேயே பிடிக்கப்பட வேண்டும். ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானது எனச் சொல்லப்படுகிற நம் நாட்டின் உளவுத் துறை கள்ள நோட்டு உற்பத்தியாகும் இடத்தில் பிடிப்பதை விட்டுவிட்டு அதற்காக சாதாரண மக்களை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.