ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2024 (09:41 IST)

சபரிமலை யாத்திரை சென்ற பக்தர் திடீர் உயிரிழப்பு! - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த தேவசம்போர்டு!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நடந்து சென்ற பக்தர் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தாருக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் பலரும் ஐயப்பனுக்கு மாலை போட்டு தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் நேற்று முன் தினம் ஆந்திர மாநிலம் விஜயபுரத்தில் இருந்து சபரிமலை யாத்திரை வந்த முருகாச்சாரி என்ற பக்தர், பம்பையிலிருந்து சன்னிதானம் நோக்கி மலையேறி வந்தபோது நீலமலை பகுதியில் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பிறகு அவர் அங்குள்ள சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்து நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் முருகாச்சாரி குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K