1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (11:03 IST)

சபரிமலையில் தொலையும் குழந்தைகளை கண்டுபிடிக்க டேக் திட்டம்! – கூடுதல் போலீஸார் கண்காணிப்பு!

சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் சபரிமலை வரும் குழந்தைகளை கண்காணிக்க டேக் வசதி செய்யப்பட்டுள்ளது.



சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி மற்றும் மண்டல பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், இருமுடி கட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த முறை ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினசரி சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் சபரிமலை செல்லும் நிலக்கல், பம்பை, சன்னிதானம் பகுதிகள் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மூச்சு விட சிரமப்பட்டு மயக்கமடைவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சபரிமலையில் மருத்துவ முகாம்கள், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வரும் வழியில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு குழந்தைகளை பலர் கூட்டி வரும் நிலையில் குழந்தைகள் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்கும் விதமாக குழந்தை பெயர், தகப்பனார் பெயர், மொபைல் எண் ஆகியவற்றை குறிப்பிட்ட டேக் ஒன்று குழந்தைகளுக்கு மாட்டிவிடப்படுகிறது.

Edit by Prasanth.K