1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (08:43 IST)

மருத்துவர்களை வீட்டை காலி செய்ய சொன்னால் நடவடிக்கை – டெல்லி அரசு உத்தரவு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களை வீட்டை காலி செய்ய சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி அரசு எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என இரவு, பகல் பாராமல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் சுய ஊரடங்கின்போது மருத்துவர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைத்தட்ட சொல்லி பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

இணையத்தில் பலர் டாக்டர்களை புகழ்ந்து பதிவுகளை இட்டு வந்தாலு, உண்மை நிலவரம் வேறாக உள்ளது. கொரோனா வார்டுகளில் பணிபுரியும் செவிலியர்கள், டாக்டர்களை வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ள டெல்லி மாநில அரசு மருத்துவர்கள், செவிலியர்களை வீட்டை காலி செய்ய வற்புறுத்தும் வீட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சமூக ஆர்வலர்கள் சிலர் அனைத்து மாநிலங்களிலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.