1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 மார்ச் 2020 (14:59 IST)

இந்த வட்டத்தை நீ தாண்டாத, கட்டத்தை நான் தாண்ட மாட்டேன் – ஸ்ட்ரிட்டு காட்டும் ஊர்கள்!

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தீவிரமடைய தொடங்கியிருக்கும் சூழலில் அது மூன்றாம் கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். மாநில அரசுகள் ஊரடங்கை தீவிரமாக கடைபிடித்து வருகின்றன. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது மக்கள் போதிய விழிப்புணர்வுடன் செயல்படவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்த நிலையில் தற்போது மிகவும் கட்டுக்கோப்பாக ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.

நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளி காக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்னதான் மக்களை வெளியே வராமல் இருக்க சொன்னாலும் அன்றாட காய்கறிகளை வாங்க மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளி பேண கட்டமிடுதல், வட்டமிடுதல் போன்றவற்றை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

இந்த கட்டம் போடும் திட்டம் ஓரளவுக்கு கை கொடுக்கும் நிலையில், உள்ளூர் காய்கறி மார்க்கெட்களில் பத்து பத்து பேராக உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். முதல் பத்து பேர் காய்கறி வாங்கி வெளியேறிய பிறகு அடுத்த பத்து பேர் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகள் மூலம் பொது இடங்களில் சமூக இடைவெளியை ஏற்படுத்த முடிவதாகவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.