திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (12:30 IST)

கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50-ஆக உயர்வு.! மீட்டுப் பணிகளுக்காக ராணுவம் வரவழைப்பு.!!

Landslide
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 50-பேர்  உயிரிழந்துள்ள நிலையில், மீட்டுப் பணிகளுக்காக இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
 
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியும், லேசான நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலையில்  இன்று அதிகாலையில் 2 மணியில் இருந்து 4 மணிக்குள் அடுத்தடுத்து மொத்தம் 3 இடங்களில் மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டது. குறிப்பாக வயநாடு பகுதியில் உள்ள  சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மண்ணுக்கடியில் புதைந்தனர். 
 
இரவு நேரம் மற்றும் கன மழை பாதிப்பு காரணமாக மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க தொடங்கியது. இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பலத்த காயங்கள் மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என  அஞ்சப்படுகிறது.

Kerala
நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம்,  தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் மூலமும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
MK Stalin
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்:
 
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவு நிகழ்வுகள் மற்றும் அதனால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோனதைக் குறித்து அறிந்து மிகவும் வேதனைக்குள்ளானேன் என்று தெரிவித்துள்ளார். இன்னமும் பலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது என்றும் முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் நிச்சயம் அனைவரையும் காப்பாற்றும் என்று நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
நமது சகோதர மாநிலமான கேரளம் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில், அவர்களுக்குத் தேவைப்படும் எந்த விதமான இயந்திரம், பொருள் மற்றும் மனித ஆற்றல் சார்ந்த உதவியையும் வழங்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.