நேரம் பார்த்து விலையை உயர்த்திய கோவிஷீல்டு – மக்கள் அதிர்ச்சி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் கோவிஷீல்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் அவசர கால தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் ரூ.250 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் விலையை சீரம் நிறுவனம் உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கோவிஷீல்டு தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்றும், மாநில அரசுகளுக்கு ரூ.400 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள சீரம் நிறுவனம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தடுப்பூசியை ஒப்பிட்டால் கோவிஷீல்டின் விலை குறைவு என்றும், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்த திடீர் விலையேற்றம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.