எம்.பி சீட் கொடுக்காததால் தகராறு.. காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவும் முன்னாள் முதலமைச்சர்?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியில் எம்.பி சீட் தராததால் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பாஜகவில் இணைய போவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமைத்த இந்தியா கூட்டணி விரிசலை சந்தித்து வருகிறது. சில மாநில கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியை தவிர்த்து தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எம்.பி சீட்டிற்காக பஞ்சாயத்துகள் தொடங்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவராகவும், முன்னாள் முதல் அமைச்சராகவும் இருந்தவர் கமல்நாத். இவர் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியில் 9 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது அந்த தொகுதியில் இவரது மகன் நகுல்நாத் எம்.பியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டுமென கமல்நாத் கேட்ட நிலையில் காங்கிரஸ் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்தது குறித்து கமல்நாத் மீது மேலிடம் அதிருப்தியில் இருந்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தனக்கு எம்பி சீட் கொடுக்காததால் தன் மகன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு கமல்நாத் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
Edit by Prasanth.K