விலைவாசி உயர்வு: மாநிலங்களவையில் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்கள் வாக்குவாதம்
விலைவாசி உயர்வு பிரச்சனை தொடர்பாக, மாநிலங்களவையில் இன்று காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட்கள் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
மாநிலங்களவையில் இன்று விவாதநேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது, "தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால், விலைவாசி முழுவீச்சில் கட்டுப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், பதவிக்கு வந்த உடனே அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவே இல்லை. விலைவாசியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வருகின்றனர்.
எழைகளின் பிரச்சனைகளை புரிந்துக்கொள்ளாமல் செயல்பட்டதாக பாஜகவினர் எங்களை குற்றம்ச்சாட்டினர். ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்கூட நிறைவு பெறாத நிலையில், எழைகளை துயரத்திற்கு அவர்கள் தள்ளியுள்ளனர். கடுமையான விலைவாசி உயர்வால், மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
குலாம் நபி ஆசாதுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக உறுப்பினர் முக்தர் அபாஸ் நக்வி, "விலைவாசியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதற்கு யார் காரணம்? ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கொள்கைகள் தானே இதற்கெல்லாம் காரணம்" என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, "ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கொள்கைகளை, பாஜக ஆட்சியினர் எதற்காக பின்பற்ற வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.