வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (14:00 IST)

அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமின்.! தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது..! உச்ச நீதிமன்றம்...

Ankith Diwary
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை துணை இயக்குநர் அங்கித் திவாரியை கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கீத் திவாரி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் வழங்க மறுத்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
 
இதையடுத்து அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் தொடர்பான சீராய்வு மனு கடந்த 15ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அங்கித் திவாரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்திலேயே நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறி அவரது ஜாமீன் தொடர்பான சீராய்வு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

 
இந்நிலையில் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை விட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.