ஓய்வு பெற்ற டிரைவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலெக்டர்
ஓய்வு பெற்ற டிரைவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலெக்டர்
கலெக்டர் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவருக்கு, மகாராஷ்டிர மாநில கலெக்டர் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றியவர் திகம்பர் தாக்(58). 35 வருடங்களாக பணிபுரிந்து வந்த அவர், சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
பணியிலிருந்து விடைபெற்றுச் செல்லும் கடைசி நாளன்று அவருக்கு அலுவலக அதிகாரிகள் பல சிறப்பு பரிசுகளை அளித்தனர். அதையெல்லாம் கண்டு பேசமுடியாமல் நின்றிருந்த திகம்பருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
அவரை வெளியே அழைத்து வந்தார் கலெக்டர் ஸ்ரீகாந்த், ரோஜாப்பூவால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த தனது காரின் அருகில் அழைத்துச் சென்றுள்ளார். சரி வழக்கம் போல் நம்மை இன்று கார் ஓட்ட சொல்கிறார் என நினைத்து திகம்பரும் காரை எடுக்க சென்றுள்ளார்.
ஆனால், அவரை பின்னால் அமர செய்த கலெக்டர், அவரே காரை ஓட்டி, திகம்பரின் வீடு வரை சென்று, அவரை இறக்கி விட்டு வந்துள்ளார். இதனால், இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போனராம் திகம்பர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த கலெக்டர் “திகம்பர், கடந்த 35 வருடமாக 18 கலெக்டர்களுக்கு டிரைவராக பணி புரிந்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் அவர் சிறு விபத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே அவர் ஓய்வு பெறும் நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிட நான் முடிவு செய்தேன். அதனால்தான் அவரை பின்னால் அமர வைத்து நான் காரை ஓட்டினேன். இத்தனை வருடமாக எங்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றவருக்கு நான் செய்யும் கடமையாக இதைக் கருதுகிறேன்” என்று கூறினார்.
கலெக்டர் ஸ்ரீகாந்தின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.