திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (15:54 IST)

மினிமம் பேலன்ஸ் இல்லாததால் ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி வசூல்.!தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.!!

Rahul Gandhi
மினிமம் பேலன்ஸ் இல்லை’ எனக் கூறி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதமாக வசூலித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
 
2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை [மினிமம் பேலன்ஸ்] இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ. 2331 கோடி என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி மக்களவையில் தெரிவித்தார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகின்றன என்று விமர்சித்துள்ளார். தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு, ‘மினிமம் பேலன்ஸ் இல்லை’ எனக் கூறி ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதமாக வசூல் செய்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
 
மேலும் மக்களின் முதுகெலும்பை உடைக்கும் முயற்சியாக மோடியின் சக்கர வியூகத்தில் திறக்கப்பட்ட கதவுதான் இந்த அபராத நடைமுறை என்று குறிப்பிட்டுள்ள ராகுல், இந்திய மக்கள் அபிமன்யூக்கள் அல்ல, அர்ஜுனர்கள் என புரிந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 

 
சக்கர வியூகத்தை உடைத்து உங்களது எல்லா அட்டூழியங்களுக்கும் எப்படி பதில் தர வேண்டும் என மக்களுக்கு தெரியும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.