வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified புதன், 16 நவம்பர் 2022 (11:07 IST)

பாஜக பாட்சா தெலங்கானாவில் பலிக்காது: கேசிஆர் தடாலடி!

டிஆர்எஸ் கட்சியின் முக்கிய கூட்டத்தில் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளது என முதல்வர் கேசிஆர் பேசியதால் பரபரப்பு.


தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், மாநிலத்தில் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்பில்லை ஆனால் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான ஆயத்தங்களைத் தொடங்குமாறு தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

டிஆர்எஸ் கட்சி தலைமையகமான தெலுங்கானா பவனில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என கேசிஆர் தெளிவுபடுத்தினார். எவ்வாறாயினும், தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளதால் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராகி, தங்கள் தொகுதிகளில் உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் மாநில அரசு மேற்கொண்டு வரும் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுமாறும் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் டிஆர்எஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிகள் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிட்டிங் எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சி சீட்டு பெறுவார்கள் என்றும் கேசிஆர் தெளிவுபடுத்தினார்.

எம்.எல்.ஏ.க்கள் மக்கள் மத்தியில் இருக்கவும், அவர்களுடன் பழகவும், ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் அறிவுறுத்தினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சியை தக்கவைத்து தனது கட்சி ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று டிஆர்எஸ் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதோடு அனைத்து கருத்துக்கணிப்புகளும் டிஆர்எஸ்-க்கு சாதகமாக இருப்பதாக கூறியுள்ள கேசிஆர், தேர்தலில் டிஆர்எஸ் 100% வெற்றி பெறும் என்றார். பாஜகவை திறம்பட எதிர்கொள்ளுமாறு கட்சித் தொண்டர்களை கேசிஆர் கேட்டுக் கொண்டார். மற்ற மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதில் பாஜக வெற்றி பெற்றாலும், தெலங்கானாவில் அது நடக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Edited by: Sugapriya Prakash